அறக்கட்டளை

தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை

உலகமயமாக்கலில் கல்விப் பண்டம்

“ஏழைக்கு எழுத்தறி வித்தல்” அறங்களிலே மிக உயர்ந்த அறம் என்பான் மாப்புலவன் பாரதி. ஏழைக்கு எழுத்தறிவித்த கல்விக்கொடை வள்ளல்கள் பலர் தமிழகத்தில் இருந்துள்ளனர். இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டத் தாக்கத்தின் கீழ் கல்விக்கூடங்களைத் தொடங்கிய நாட்டுப் பற்றாளர்களை நாம் அறிவோம். உலகமயமாக்கலுக்குப் பின் எல்லாம் தலைகீழானது. அஃது அறமெனப்படுவதை எல்லாம் அடித்துச் சூறையாடி விட்டது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதே எல்லோரையும் இயக்கும் தாரக மந்திரம் ஆனது. “திறனறிந்து தீதின்றி வந்த” பொருளே “அறனீனும் இன்பமும் ஈனும் என்ற வள்ளுவம் எல்லோருக்கும் கசப்பானது. ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பது திரிந்து பொருளுடையோருக்கு எழுத்தை விற்றல் என்றானது. அதுவே இழப்பே இல்லாத கோடி கோடியாய்ப் பொருளீட்டும் உயர் வணிகமானது.

சந்தையே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்பது இன்று உலகை ஆளும் பொருளியற் கொள்கை. கல்வியும் இன்று சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்ட வணிகப் பண்டம்; ஏழை எளியோர்க்கு எட்டாப் பண்டம். தாய்மொழியைக் கல்வியிலிருந்து விலக்கும் பொழுது அதன் சந்தை மதிப்பு விர்ரென்று விரைந்து மேலேற இன்று அது விண்ணில் மிதக்கும் விலை கணிக்க முடியாத பண்டம். தமிழ்நாட்டின் இன்றய மெய்நடப்பு இதுவே.

ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு. தாய்மொழியைக் கல்வியிலிருந்து அகற்றி கல்வியை வணிகப் பண்டமாக்கும் இழிசெயலுக்கு எதிர்வினையே தாய்த்தமிழ்க் கல்வி இயக்கம். தமிழ்த்தேசியத்தின் தாக்கத்தால் விளைந்த இவ்வியக்கம் இன்று தமிழ் நாட்டில் ஆங்காங்கு வேர் பிடித்து வளர்ந்து வருகிறது. “ஏழைக்கு எழுத்தறி வித்தல் என்ற ஈடில்லா அறத்தை இன்றும் உயர்த்திப் பிடிக்கும் நல்லோர் சிலர் ஆங்காங்கே அதற்கு நீரூற்றிச் செழிக்கச் செய்கின்றனர். அவ்வகையில் திருப்பூரில் தாய்த்தமிழ்க் கல்விப் பணிக்காய் உருவானதே தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை.

அறக்கட்டளையின் தோற்றமும் அடிப்படைக் கொள்கையும்

தொடக்கத்தில் தாய்த்தமிழ்ப் பள்ளிப் பணிக்குழுவாய் ஒருங்கிணைந்த நண்பர்கள் அதன் போதாமையை உணர்ந்ததும் தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளையாக முறையான வடிவம் கொண்டனர். திருவள்ளுவர் ஆண்டு 2043 பங்குனி 27 ஆம் நாளில் (09/04/2012) சட்டப்படியான பதிவுடன் அது தன் பிறப்பை அறிவித்துக் கொண்டது.

அன்று முதலே அது மைய அரசின் 80 G வரி விலக்குப் பெற்ற அறக்கட்டளையாகத் தொடர்கிறது

கீழ்க்காணும் நோக்கங்களைத் தன் கொள்கைகளாய் ஆவணத்தில் பதிந்து அனைவரும் அறியப் பறைசாற்றியது.

1.கல்வி வணிகமயமாகியுள்ள இன்றைய சூழலில் அப்பழுக்கற்ற கல்விப்பணி ஆற்றுவது.

2.அறிவுக்கான கதவைத் தாய்மொழியே திறக்கும் என்ற அறிவியல் உண்மையின் அடிப்படையில் தாய்மொழியாம் தமிழ்மொழியில் அனைத்து நிலைகளிலும் கல்வி வழங்குவது.

3.சாதி, சமய ,வர்க்க, பால் வேறுபாடற்று அனைவருக்கும் அறிவும் பண்பும் ஊட்டக் கூடிய கல்வியை வழங்குவது.

4.மெய்ப்பொருள் காணும் அறிவையும் “ஒத்தது அறிந்து வாழும் சமத்துவப் பண்பையும் மாணவர்களிடையே வளர்த்து நல்ல வள்ளுவத் தமிழ்க்குடிமக்களாக உருவாக்குவது.

5.உலகின் அறிவு வாசல்கள் அனைத்தையும் தமிழ்க் குழந்தைகளுக்குத் திறக்க வழிவகை காண்பது.

அறக்கட்டளை உறுப்பினர்கள்

தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள். பணம் என்ற ஒன்றைத் தவிர வேறெந்தச் சிந்தனையும் இல்லாத பெரும்பாலானோரைக் கொண்ட இன்றைய இச்சமூகத்தில் தாம் ஈன்ற செல்வத்தின் ஒரு பகுதியையும், தம் பொன்னான நேரத்தையும் தாய்த்தமிழ்க் கல்விப்பணிக்கு ஒதுக்கி வரும் இச்சான்றோர்களைத் தமிழகக் கல்வி வரலாறு பொன்னெழுத்துகளால் பதிந்து கொள்ளும்.

அறக்கட்டளைக்கு அப்பால்…

தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை தன்னை மட்டுமே நம்பித் தன் பணியைத் தொடங்கியது. தொடக்கத்தில் சிலபல சோர்வுகளும் தயக்கங்களும் தலைகாட்டவே செய்தன. சோர்வைப் போக்கி தயக்கங்களைக் களைந்து உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஊக்கம் தந்தவர் அன்றய பொருளாளர் திருமிகு மு . திருப்பதி அவர்கள். தடைக்கற்கள் பலவற்றைத் தகர்த்து அறக்கட்டளைத் தன் பயணத்தைத் தொடர்ந்தது. அறக்கட்டளையின் அப்பழுக்கற்ற எழுத்தறிவித்தல் அறப்பணியின் வீச்சு மெல்ல மெல்ல நல்ல உள்ளங்களைத் தொட்டது. கல்வி நிறுவனங்கள் பலவற்றின் உயிர்மூச்சு விளம்பரங்களிலேயே தங்கியுள்ள இன்றைய சூழலில் தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை அறப்ணிகளே அதன் பரப்புரை முகவர்கள் ஆயின. பலர் அறக்கட்டளை நோக்கி ஈர்க்கப்பட்டனர். அறக்கட்டளையோடு இந்த ஈகக் கைகளும் இணைய அதன்  கல்விப் பயணம் உறுதியுடன் முன்னோக்கிச் செல்லும் என்பதில் எள்ளளவும் அய்யம் இல்லை.