கருத்தியல்

கோட்பாடும் குறிக்கோளும்

உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தாய்மொழிக் கல்வி ஆளும் வகுப்பாரின் வஞ்சகச் சூழ்ச்சியால் தமிழ்நாட்டில் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் தனியார் மயமாக்கல் என்பனவற்றின் சங்கிலித் தொடர் விளைவால் கல்வி இங்குக் கூவிக் கூவி விற்கும் பண்டப் பொருளானது. பண்டப் பொருளுக்கு விலை மதிப்பூட்ட கல்வி வணிகர்களுக்கு ஆங்கிலம் கை கொடுக்கிறது. இவர்களின் வித்தகத்தால் தமிழ்வழிக் கல்வி பொலிவிழந்து போனது.

ஆங்கிலேயர் ஆட்சி அகன்ற பின் பட்டிதொட்டி எங்கும் விரைந்து பரவிய கல்வி ஆங்கிலவழிக் கல்வியால் மீண்டும் நகர்மயமாகி உள்ளது; உயர்சாதி கைகளுக்குள் அகப்பட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டுக் கல்வி வானில் இருள் சூழ்ந்துள்ளது. இவ்விருளில் ஒளிபாய்ச்சும் சுடர் மீன்களே தாய்த்தமிழ்ப் பள்ளிகள். தாய்த்தமிழ் என்ற கருத்தியலின் செயல் வடிவமே இத்தாய்த்தமிழ்ப் பள்ளிகள்.

தாய்த்தமிழ் என்ற கருத்தியலுக்கும் அதன் செயல் வடிவத்திற்கும் தாயும் தந்தையுமானவர் தோழர் தியாகு அவர்களே. சென்னை அம்பத்தூரில்தான் முதல் தாய்த்தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் முளைத்தன. மேற்கு மண்டலத்தில் மேட்டூர் கோபி திருப்பூர் பல்லடம் பொள்ளாச்சி எனப் பல்வேறு இடங்களில் போட்டி போட்டுக் கொண்டு பள்ளிகள் தொடங்கப்பட்டன. இன்று தமிழ்நாட்டில் முப்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பல்வகை நெருக்கடிகளுக்கும் இடையில் தாய்த்தமிழ் என்ற மூச்சுக் காற்றில் உயிர்ப்புடன் இயங்கி வருகின்றன; தமிழ்வழிக் கல்வியையும் தமிழ் மரபையும் மீட்டெடுக்கப் போராடி வருகின்றன.

தாயின் ஆளுமை

“தாயில்லாமல் நான் இல்லை” என்பது திரைப்படம் ஒன்றின் பாடல் வரி. தாயில்லாமல் எவரும் இல்லை எவ்வுயிரினமும் இல்லை என்பதே மெய்மை. தாயிடமிருந்தே உலக மனித குல வரலாறும் தொடங்குகிறது. உலகின் தொடக்கக் காலச் சமுதாயங்கள் அனைத்தும் தாய்வழிச் சமுதாயங்களே. தாயே சமூகத்தை வழி நடத்தினாள். தாயின் அன்பும் அறிவும் வீரமுமே சமூகத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்த்தின.

மனிதகுல வரலாற்றில் உடைமை உருவாகி ஏற்றத்தாழ்வுகள் கருக்கொண்ட பின் தாய் படிப்படியாகப் பின் தள்ளப்பட்டு தந்தை முன் நகர்ந்தான். தாய் வீட்டிற்குள் அடைபட்டாள். எனினும் தாயே குடும்பத்தின் பிறங்கடை(வாரிசு)  வளர்ச்சிக்குத் தொடக்கமாகவும் துணையாகவும் அன்றும் இன்றும் அமைகிறாள். நூலைப் போலச் சேலை தாயைப் போலப் பிள்ளை என்பது இன்றைய ‘கணினி யுகத்’திலும் மாறாத உண்மை.

குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் அவளே அடிப்படை. அப்படியானால் ஒரு சமூகத்தின் இனத்தின் அறிவு பண்பாட்டு வளர்ச்சிகளுக்குத் தாய்களன்றோ இன்றும் பொறுப்பேற்கிறார்கள்? பெண்களின் பங்கின்றி எந்த மாற்றமும் எந்தப் புரட்சியும் எங்கும் நடந்தேறாது என்பதே அனைத்துப் புரட்சியாளர்களும் ஏற்றுக் கொண்ட மெய்யியல்.  கார்க்கியின் தாயும் ஏன் கருணாநிதியின் மனோகராவும் கூட அதைத்தானே உணர்த்துகின்றன?

தாயும் தாய்மொழியும்

தாய்ப்பாலே குழந்தைக்கு நல்லூட்டம் தருகிறது என்கிறது மருத்துவம். தாய்ப்பால் அருந்தாத குழந்தைகள் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெறத் தவறுகின்றன என முன்மொழிகின்றன ஆய்வுகள். தாய் பாலூட்டி குழந்தையின் உடலை வளர்க்கிறாள். பாலூட்டும் பொழுதும் உணவூட்டும் பொழுதும் குழந்தையோடு தாயின் அன்பு சொரிந்த உரையாடலும் அரங்கேறுகிறது. பாலோடும் உணவோடும் அங்கே மொழியும் ஊட்டப்படுகிறது. தாய் ஊட்டும் மொழியே தாய்மொழி. தாய்ப்பால் உடலை வளர்க்க தாய்மொழி அறிவை வளர்க்கிறது. தாய்ப்பாலை இழக்கும் குழந்தைகள் உடல் நலம் குன்றும்; தாய்மொழியில் கற்காத குழந்தைகள் அறிவுத் திறன் மங்கும்.

அறிவியல் இன்று வியத்தகு வளர்ச்சி பெற்றுள்ளது. அது பல்வேறு புதிய கண்டு பிடிப்புகளைப் பேசுகின்றது. கருவில் வளரும் பொழுதே குழந்தைகள் தாயின் மொழியை அதாவது தாய்மொழியைக் கேட்டு வளர்கின்றன என்பது அவற்றில் ஒன்று. கருவிலேயே குழந்தையின் மூளையில் தாய்மொழிப் படிமங்கள் பதியத் தொடங்கி விடுகின்றன. பிறந்த பின் தாயோடும் பின்னர் ஊரோடும் உறவோடும் உரையாடல் நிகழும் போது மூளையில் பதிந்த படிமங்கள் தெளிவு பெறுகின்றன. குழந்தை தன் தாய் தந்த மொழியில் அறிவைப் பெறவும் சிந்தனையை வளர்க்கவும் தொடங்குகிறது.

செவிலித் தாயான பள்ளி

தாயையும் தந்தையையும் அடுத்து குழந்தை வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது எண்ணையும் எழுத்தையும் கற்றுத் தரும் பள்ளியே ஆகும். பள்ளிக்கு வருவதே குழந்தைக்குத் தாயிடமிருந்து ஏற்படுகின்ற முதல் பிரிவு நிகழ்வு. அதன் பின்னர் பள்ளியும் ஆசிரியர்களுமே குழந்தைக்குத் தாயாகவும் தந்தையாகவும் மாறுகின்றனர். பள்ளிச் சூழலே குழந்தையை வளர்க்கின்றது. பள்ளியின் கற்பித்தல் முறைகளும் பிறவும் குழந்தையின் அறிவு பண்பாட்டு வளர்ச்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

குழந்தை தாயும் தாய்மொழியும் தந்த அறிவோடுதான் பள்ளிக்கு வருகிறது. எந்தக் குழந்தையும் முழு முட்டாளாகப் பள்ளிக்கு வருவதில்லை. பள்ளி ஆசிரியர்கள் தாயாக இருந்து குழந்தையோடு உரையாடத் தொடங்கினால் குழந்தை இயல்பான வளர்ச்சி பெறும். தாயாக இருந்து என்பது இங்குத் தாய் போல அன்பைப் பொழிவதை மட்டும் குறிக்கவில்லை; தாய் தந்த மொழியில் உரையாடுவதையும் குறிக்கிறது. தாயிடம் தான் கற்ற மொழியில் ஆசிரியர் உரையாடும் பொழுதுதான் குழந்தைக்கு ஆசிரியரிடம் நெருக்கம் ஏற்படுகிறது; ஆசிரியர் காட்டும் அன்பை உணர்கிறது; கற்றல் இயல்பாய் நிகழ்கிறது.

இவ்வாறு இல்லாமல் தனக்கு அமுதூட்டி அன்பைச் சொரிந்து அம்மா என அழைக்கக் கற்றுக் கொடுத்த அம்மாவை மம்மி என ஆசிரியர் சுட்டும் பொழுது அதன் தலைக்குள் சம்மட்டி அடி விழுகிறது; அப்பாவை டாடி எனும் பொழுது அதன் மூளை அதிர்கிறது. தான் அணில் ஆடு மரம் என அறிந்தவற்றை ஸ்குரல், கோட், டிரீ எனப் புகட்டும் போது குழம்பிப் போகிறது. தாயும் தந்தையும் உறவும் தந்த அறிவு இங்கே மறுக்கப்படும் பொழுது குழந்தை உள்ளூரத் தவித்துப் போகிறது. பள்ளியும் ஆசிரியர்களும் அந்நிமாகிப் போகின்றனர். இத்தகைய கொடிய மனமுறிவுக்குப் பின் கற்றல் எப்படி அங்கே இனிதே நிகழ்வுறும்?

அறிவியல் உண்மை

மேலே குறிப்பிட்டுள்ளவை வெறும் கற்பனையால் உதிர்க்கப்பட்டவை அல்ல. ஆய்வு முடிவுகளின் வெளிப்பாடுகள் அவை. உலகின் தலைசிறந்த குழந்தை உளவியலாளர்களும் கல்வியாளர்களும் இச்செய்திகளை உறுதிப்படுத்தி வலியுறுத்தி வருகின்றனர். குழந்தையின் தொடக்கக் கல்வி தாய்மொழியில்தான் அமைய வேண்டும் என்ற கருத்தை இதுவரை எவரும் மறுக்கவில்லை. உலகின் முன்னேறிய நாடுகள் அனைத்திலும் அதுவே நடைமுறையாக உள்ளது. அங்குத் தொடக்கக் கல்வி மட்டுமின்றி உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என அனைத்தும் தாய்மொழியிலேயே நடைபெறுகின்றன. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் அங்குதான் நிகழ்கின்றன.

இந்த அறிவியல் உண்மைக்கு இஸ்ரோ அறிவியலாளர்களும் சான்றாகத் திகழ்கின்றனர். விண்ணில் செயற்கைக் கோள்களை ஏவுவதில் வல்லரசு நாடுகளும் மூக்கில் விரலை வைத்து வியக்கும் வண்ணம் அவர்கள் சாதனை புரிந்து வருவது யாவரும் அறிந்ததே! இச்சாதனைக்கு அடிப்படைக் காரணம் இஸ்ரோ அறிவியலாளர்களில் பெரும்பாலானோர் தொடக்கக் கல்வியை அவரவர் தாய்மொழியில் கற்றதே என்கிறார் அதன் தலைமை இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரை அவர்கள். இதையேதான் மறைந்த விண்ணியல் விற்பன்னர் அப்துல் கலாமும் தாம் செல்லும் இடமெல்லாம் பரப்பி வந்தார்.

பெறற்கரிய தமிழ்ப்பேறு

நமக்கு நம் தாய் தந்த தாய்மொழி தமிழ்; ஊரும் உறவும் உருவேற்றிய உன்னத மொழி தமிழ்; நாடும் மக்களும் நல்கிய நன்மொழி தமிழ். உலகின் மூத்த முதன்மொழிகளில் ஒன்றும் அது. பல மொழிகளுக்குத் தாயான மொழியும் கூட அது. உயர்ந்ந சிந்தனைகளை உலகிற்கு வழங்கிய மொழி அது. ஆங்கிலம் மொழியாகச் செம்மையுறுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே இலக்கியம் இலக்கணங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த மொழி அது. அன்று போல் இன்றும் உயிர்ப்புடன் என்றும் கன்னியாய்த் திகழும் கவின் மொழி அது. வளர்ந்து வரும் அறிவியலை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் அளப்பரிய சொல்வளம் பெற்ற மொழி அது. புதுப்புது ஆக்கங்களுக்கு உடனுக்குடன் சொற்களை உருவாக்கிக் கொள்ளும் வேர்ச்சொல் வளமிக்க மொழி அது. எந்த மொழியின் துணையும் இன்றி தனித்தியங்கும் ஆற்றல் கொண்ட மொழி அது.

தமிழ் நமக்குத் தாய்மொழியாய் வாய்த்தது பெறற்கரிய பேறல்லவா? தாய் நமக்கு உயிர் தந்து உருவம் தந்தாள். அவள் வழியாய் வந்த தமிழ் நமக்கு அறிவைத் தருகிறது. உடல் வளர்க்கிறாள் தாய்; உள்ளம் வளர்க்கிறது தமிழ்.  தமிழும் நமக்குத் தாய்தான். அதனாலேயே அது தாய்த்தமிழ் எனச் சிறப்புறுகிறது. தாய்த்தமிழில் கற்பதுதானே இயற்கையானது? தாய்மொழியில் கற்றல் எனும் உலக ஒழுங்கோடு ஒத்தியங்குவதும் அதுதானே? தாய்த்தமிழ்க் கல்வி எனும் உலகம் சார்ந்த இயற்கை ஒழுங்கோடு முரண்படும் எதுவும் செயற்கையானது. செயற்கை ஆக்கத்தைத் தராது; அழிவையே கொணரும்.

அழிவு ஆங்கிலம்

ஆங்கிலக் கல்வி அழிவைத் தரும் செயற்கைக் கல்வியே! பள்ளிக்கு முதன் முதலாக வருகை தரும் குழந்தைகளின் காதில் தாய்மொழி அல்லாத வேற்றுமொழிச் சொற்கள் விழும் போது ஏற்படும் உளவியல் சிக்கல்களை மேலே பார்த்தோம். அவை குழந்தையின் இயல்பான அறிவு வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக அமைந்து விடுகின்றன. படிப்பு அறிவு அறவே இல்லாத அல்லது குறைந்தளவு படிப்பறிவே கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளே இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஓரளவு ஆங்கில அறிவுடைய குழந்தைகள் தட்டுத் தடுமாறித் தேறும் வாய்ப்புண்டு.

தாய்மொழி தமிழாக இருந்தாலும் அதை முற்றாகப் புறக்கணித்து வீட்டில் ஆங்கிலத்திலேயே உரையாடும் மேட்டுக் குடியினர் குழந்தைகளுக்கு எந்தச் சிக்கலும் இராது. அவர்களுக்கு ஆங்கிலம் இரண்டாவது தாய்மொழி அல்லது முதல் தாய்மொழியாகவே மாறிவிடுகிறது.  ஆனால் தமிழ்நாட்டில் முதல்வகைப் பெற்றோரே பெரும்பான்மையினர். இரண்டாவது வகையினர் அடுத்த எண்ணிக்கையில் இருப்பவர்கள். மூன்றாவதான ஆங்கிலப் புரவலர்கள் மிகமிகச் சிறுபான்மையினர். ஆனால் இந்தச் சிறுபான்மையினர் விரித்த சூழ்ச்சி வலையில் மிகப் பெரும்பான்மையினர் அகப்பட்டுக் கொண்டுள்ளனர் என்பதே தமிழகத்தின் சோக வரலாறு.

மாயவலையில் விழுந்த கதை

காலங்காலமாய் அதிகாரத்தின் உச்சியில் இருந்தவர்கள் இந்தச் சிறுபான்மையினர். கல்வியையும் அதன் வழி கிடைக்கப் பெற்ற அறிவையையும் தங்களுக்கே உரிய உடைமையாக்கிக் கொண்டதால் அதிகாரம் அவர்கள் கைகளுக்குள் அடங்கிப் போயிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி அகன்ற பின் காமராசரை முதல்வராய்க் கொண்ட தமிழகத்தில் கல்வி பெரும் வீச்சில் மக்களிடையே சென்றடையத் தொடங்கியது. பட்டப் படிப்பு வரை தமிழ்வழிக் கல்வியே கோலோச்சியது. கல்வி விரைந்து பரவ இது பெரும் துணை நின்றது. அதிகாரம் படிப்படியாகக் கைமாறியது.

நீண்ட நெடுங்காலமாய் அதிகாரத்தைச் சுவைத்தவர்கள் பொறுத்துக் கொள்வார்களா? அதிகாரத்தை எளிதில் விட்டு விடுவார்களா?ஆங்கில வலையை விரித்தார்கள். அனைவரும் அகப்பட்டுக் கொண்டோம். அகப்பட்டதே தெரியாமல் வெளியேற வகையின்றி அகப்பட்டுக் கொள்ளுமாறு விரிக்கப்பட்ட மாயவலை இது.

பொதுவாகக் கீழிருப்போர் தஙகளை விட உயர்ந்த இடத்தில் இருப்போரைப் பார்த்து ஒழுகுவது மாந்தச் சமூக இயல்பு. உயர்ந்தோரின் ஆங்கிலம் அனைவரும் அவ்வாறு உயர ஆங்கிலமே வழி எனக் கற்பித்தது. மாடி வீட்டுக் குழந்தை போல் கீழ் வீட்டுத் தன் குழந்தையும் மம்மி டாடி என்கின்ற பொழுது மாடி வீட்டுக் குழந்தை போல் தன் குழந்தையும் மேன்மையுற்று விட்டதான மனநிலை உருவாகிறது. இந்த மனநிலையே இங்கு ஆங்கிலம் கோலோச்ச வழி வகுத்துள்ளது. இதுவே ஆங்கில வலைக்குள் விழுந்தது தெரியாமல் விழுந்த கதை.

விடுதலை வழி

இவ்வலைக்குள் சிக்கிக் கொண்ட நம்மருந்தமிழ் மக்களை மீட்க வலைக்குள் சிக்காத வல்லவர்கள்தாம் கைகொடுக்க வேண்டும். தாய்த்தமிழால் இன்று உயர்ந்த நிலையில் வீற்றிருப்பவர்கள் தாய்த்தமிழ்தான் தம்மை உயர்த்தியது என்பதை எடுத்துரைக்க வேண்டும். உலகமெல்லாம் தாய்மொழிக் கல்வியால் உயர்ந்திருப்பதைப் புரிய வைக்க வேண்டும். தாயில்லாமல் நாம் இல்லை என்பதைப் போல் தமிழ் இல்லாமல் நம் அறிவு வளர்ச்சி இல்லை என்பதை உணர வைக்க வேண்டும். செந்தமிழ் தீந்தமிழ் பைந்தமிழ் எனப் பல அடைமொழிகளைப் பெற்ற நம்மருந்தமிழ் தாய்த்தமிழ் என்ற புத்தடைமொழி பெற்றிருப்பதன் பொருளைப் புரிய வைக்க வேண்டும்.

முதலில் தாய்த்தமிழால் உயர்ந்த நாம் அனைவரும் நம் குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியில் பயிற்றுவிக்க வேண்டும். நாம் எடுத்துக்காட்டாய் வழி காட்டுவோம்; ஆங்கில மாயவலையைக் கிழித்தெறிவோம்; ஆங்கிலச் சிறைச்சாலைக்குள் மூச்சுத் திணறும் நம் குழந்தைகளை விடுவிப்போம்; அவர்கள் எதிர்காலத்தை வளமாக்குவோம்; உலக அறிஞர்களின் வரிசையில் அவர்களையும் வலம் வரச் செய்வோம்.