தொடக்கப்பள்ளி

திருப்பூரில் மட்டும் மழலையர் பள்ளியுடன் கூடிய மூன்று தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பல்லடம் சாலை கலைவாணர்(என்.எஸ்.கே) நகரில் அமைந்துள்ள மழலையர் பள்ளியுடன் கூடிய திருப்பூர் தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளி அவற்றுள் ஒன்று. இப்பள்ளியின் வரலாறு தமிழ்வழிக் கல்வி எதிர் கொள்ளும் சிக்கல்களையும் அதனை முறியடிக்கும் வழிகளையும் கற்றுத் தருவதாக அமைந்துள்ளது.

திரு.எழில் சுப்பிரமணியன் தான் வீடு கட்ட வாங்கிய இடத்தில்  தியாகுவின் வழிகாட்டலில் தன் மகன் கி.சு.இனியன் முத்துசாமியை முதல் மாணவனாய்ச் சேர்த்து 07/06/2004-இல் தொடங்கினார். பள்ளியின் தொடக்கநிலையில் அவரோடு தோளோடு தோள் நின்று அனைத்துப் பணிகளிலும் தன் முகம் காட்டாமல் பங்கேற்றவர் தந்நலமறியாச் செம்மல் இராசு(எ)சாமிநாதன். மற்றவர்கள் பின்னர் இணைந்து கொண்டனர். வேலிறையன் 2006இல் இறுதியாய் இணைந்து கொண்டவர். நண்பர்கள் அனைவரும் பள்ளியை வளர்த்தெடுக்க “தாய்த்தமிழ்ப் பள்ளி பணிக்குழுவாய் ஒருங்கிணைந்தனர்.

பணிக்குழுவில் 1. எழில்சுப்பிரமணியன் 2. பழ.இரகுபதி, 3. அருள்செல்வம் 4. திருப்பதி 5. இராசு(எ)சாமிநாதன், 6. கோவிந்தராஜ் 7. சிவமுருகன் 8. சவுந்திரராஜன் 9. அகமத்கனி 10. வேலிறையன்  ஆகியோர் இடம்பெற்றனர்.  எல்லோரும் அவரவர் தகுநிலையை மீறி உழைத்ததின் நல்விளைவே பள்ளியின் வளர்ச்சி.

பள்ளி தொடங்கப்பட்டபோது சேர்ந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 35 ஆகும். மழலையர் வகுப்பில் பூக்கள் பிரிவில் 13 ஆண் குழந்தைகளும் 6 பெண் குழந்தைகளும் பிஞ்சுகள் பிரிவில் 7 ஆண் குழந்தைகளும் 9 பெண் குழந்தைகளும் முதல் வகுப்பில் மூன்று பெண் குழந்தைகள் மட்டும் சேர்ந்தனர். தொடக்கம் மகிழ்ச்சி அளிப்பதாகத்தான் இருந்தது. இந்த மகிழ்ச்சி தொடரவில்லை. 2005-2006 ஆம் கல்வியாண்டில் பிஞ்சுகள் வகுப்பிலிருந்து முதல் வகுப்பிற்கு 4 ஆண் குழந்தைகளும் 4 பெண் குழந்தைகளும் என எட்டுப் பேர் மட்டுமே தொடர்ந்தனர். எஞ்சிய எட்டுப் பேர் ஆங்கிலவழிக் கல்விக்குப் பறந்து விட்டனர். இரண்டாம் ஆண்டு பள்ளியின் மொத்த எண்ணிக்கை 29ஆகக் குறைந்தது.  

பிஞ்சுகள் வகுப்பிலிருந்து முதல் வகுப்பிற்குச் செல்லும் பொழுது ஆங்கிலவழியைத் தேடிச் செல்வது 2008-2009ஆம் கல்வி ஆண்டு வரை தொடர்ந்தது. அதே போல் மாணவர் சேர்க்கையை விட மாணவியர் சேர்க்கை அதிகமாக இருப்பதும் தொடர்ந்தது. அதன் பின்னர்தான் நிலைமை மாறியது. பிஞ்சுகள் வகுப்புக் குழந்தைகள் வெளியில் எங்கும் செல்லாமல் அப்படியே முதல் வகுப்பிற்கு வரத் தொடங்கினர். பள்ளியின் எண்ணிக்கையும் கிடுகிடுவென்று கூடத் தொடங்கியது. கீழே கொடுத்துள்ள பட்டியல் பள்ளியின் வளர்ச்சியைத் தெள்ளென விளங்க வைக்கும்.

 கல்வியாண்டு மாணவர் மாணவியர் மொத்தம்
2004-05 20 15 35
2005-06 10 19 29
2006-07 16 22 38
2007-08 17 32 49
2008-09 20 33 53
2009-10 31 34 65
2010-11 32 42 74
2011-12 35 41 76
2012-13 40 43 83
2013-14 60 55 115
2014-15 72 64 136
2015-16 78 77 155
2016-17 82 75 157

கடந்த இரண்டாண்டுகளாகவே பரப்புரைக்கு ஆசிரியர்கள் செல்வதில்லை. இடப்பற்றாக்குறையால் சேர்க்கையை மிகுந்த சிரமத்தினூடே கட்டுப்படுத்தி வைக்க வேண்டி உள்ளது. அதே நேரம் பரந்த விரிந்த இடத்தில் பள்ளியைக் கட்டி எழுப்ப மிகுந்த முனைப்போடு அறக்கட்டளை செயலாற்றி வருகிறது.   

பள்ளியின் இந்த வளர்ச்சிக்கு அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் தமிழ்வழிக் கல்வி ஆர்வலர்கள் எனப் பலரும் பாடாற்றி உள்ளனர். தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவு இருக்காது என்பதை இப்பள்ளி மாற்றிக் காட்டியுள்ளது. பெற்றோர்களே பள்ளியைத் தேடி வரும் சூழலை உருவாக்கி உள்ளது. ஆங்கில மாயை தகர்க்கப்பட்டுள்ளது. தமிழ்வழிக் கல்விக்கு இது மகத்தான வெற்றி அன்றோ?

இனி இப்பள்ளியை மேலும் வளர்ப்பதும் கட்டிக் காப்பதும் அறக்கட்டளை ஆசிரியர்கள் ஆகியோரை மட்டும் சார்ந்தது அன்று. தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தும் அனைவரையும் சார்ந்தது. அப்பொழுதுதான் தமிழ்மக்களும் தமிழ்நாடும் தமிழும் கடந்த கால வரலாற்று அடையாளங்களாக இல்லாமல் புகழோடு நீடித்து நிலைக்க வளர்ந்து செழிக்க வழி பிறக்கும்.

அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப இடம் மற்றும் கட்டட  வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாததால் 2016-2017ஆம் கல்வியாண்டுடன் (30.04.2017)  தாய்த்தமிழ் தொடக்கப்ள்ளி  மூடப்பட்டது.