வஞ்சனை விடுத்துச் சான்றோராகுக!

தமிழக ஆட்சியை 1967-இல் கைப்பற்றிய அண்ணா, சுயமரியாதை திருமண முறையை சட்ட சம்மதமாக்குதல், சென்னை மாநிலம் என்றிருந்ததை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தல், தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழியை நீக்குதல் எனும் முப்பெரும் சாதனைகளுடன், நான்காவதாக ஒரு சாதனையைப் படைக்க விரும்பினார். தமிழ்நாட்டில் பள்ளிமுதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து நிலைகளிலும் அனைத்துத் துறைகளிலும் ஐந்தாண்டுகளில் தமிழ்மொழி பயிற்று மொழியாக்கப்படும் என்னும் கொள்கைத் திட்டத்தை வெளியிட்டார்.

ஆனால் அண்ணாவின் அறிவிப்புக்கு ஏ.எல். முதலியார் போன்ற அறிஞர் பெருமக்களிடமிருந்தும் ஆட்சியைக் கைப்பற்றப் பேராதரவாக இருந்த மாணவர் சமுதாயத்திடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பின் கடுமையையுணர்ந்த அண்ணா, ஐந்தாண்டுகள் என்னும் காலக்கெடுவை மாற்றி, படிப்படியாக – என அறிவித்தார். அவ்வாறு அறிவிக்கப்பட்டு நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அண்ணாவின் பெயர் சொல்லும் கழகங்களின் ஆட்சிதான் நடைபெறுகிறது. ஆனால், அண்ணா அறிவித்த படிப்படியாக என்பது இன்றளவும் கீழ்ப்படியாகவே இருக்கின்றது. அதேசமயம், கல்லூரி, பல்கலைக்கழகம் என்னும் நிலையிலிருந்த ஆங்கிலப் பயிற்றுமொழி என்பது தொடக்கப் பள்ளி வரை நீண்டுவிட்டது. முப்பெரும் சாதனை படைத்த அண்ணா ஒரு வேதனையையும் படைத்தார். அவர் நடைமுறைப்படுத்திய இருமொழிக் கொள்கை என்னும் திட்டமானது, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழை விருப்பப் பாடமாகவும், ஆங்கிலத்தைக் கட்டாயப் பாடமாகவும் ஆக்கியது. நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, தமிழ்ப் பயிற்று மொழி படிப்படியாக நிறைவேற்றப்படும் என்பதற்கு மாறாக, தமிழ்ப் பாடமொழி படிப்படியாக நிறைவேற்றப்படுதல் பெருஞ் சோகக் கதை.

இவ்வளவுக்கும் என்ன காரணம்? மொழி தொடர்பாக நம்மிடையே மூன்று மயக்கங்கள் நீடிக்கின்றன. முதலாவது ஆங்கிலம் அறிந்தால் அனைத்துலகங்களுக்கும் சென்று வென்று வரலாம் என்பதான மயக்கம். இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மட்டுமே ஆங்கிலத்திற்கு மதிப்பு. காரணம், அந்த நாடுகளில் மட்டுமே ஆங்கில மொழி பெரும்பான்மையர் மொழி.

இங்கிலாந்திற்கு அருகில் இருக்கும் ஜெர்மனியிலும், ஜெர்மனிக்குப் பக்கத்து நாடான ரஷியாவிலும், ரஷியாவின் அண்டை நாடான சீனாவிலும், சீனாவின் பகை நாடான ஜப்பான் நாட்டிலும் ஆங்கிலத்தை வைத்து காலந்தள்ள முடியாது; ஆங்கில வழியில் வேலை வாய்ப்பு பெற முடியாது. அந்த நாடுகளுக்குச் சென்று வருகிற அனைவரும் சொல்லும் செய்தி, அந்த நாடுகளில் பெரும் தொழிலதிபர்களும் அரசு உயர் அதிகாரிகளும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் என்பதுதான்.

அந்த நாட்டுத் தலைவர்கள் நம் நாட்டிற்கு வரும்போது கூட, நம் நாட்டு தலைவர்களுடன் அவரவர் தாய்மொழியில்தான் – மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் – பேசுகிறார்கள். ஆங்கிலத்தில் பேசுதலே உயர்மதிப்பு என்னும் அடிமை மனப்பான்மை இந்தியாவில், குறிப்பாக திராவிடக் கட்சிகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்ட தமிழகத்தில்தான் கொடிகட்டிப் பறக்கிறது.

இரண்டாவது, அமெரிக்கா முதலான நாடுகளில் இந்தியர் மட்டும் பணியாற்றவில்லை. ஜப்பானியர், சீனர், ரஷியர், ஜெர்மானியர் என பல நாட்டுக்காரர்களும் பணிபுரிகிறார்கள். அவர்களெல்லாரும் அவரவர் நாட்டில் தத்தம் தாய்மொழியில்தான் கணினி உட்பட அனைத்தும் படித்து அதனடிப்படியில்தான் அமெரிக்கா முதலான ஆங்கில நாடுகளிலும் வேலைவாய்ப்புப் பெறுகிறார்கள். அப்பட்டமான இந்த உண்மை இங்கே மூடி மறைக்கப்படுதல் என்ன நீர்மை? ஆக, ஆங்கில வழியில் படித்தால்தான் அமெரிக்கா செல்ல முடியும் என்பது இரண்டாவது மயக்கம்.

ஆங்கில வழியில் படித்தால்தான் ஆங்கிலம் புரியும் – பேசவரும் என்பது மூன்றாவது மயக்கம். நம் நாட்டில் ஆங்கில வழியில் படித்து பட்டம் பெற்று, சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லும் பலரும் அங்குள்ளோரிடம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசமாட்டாதவர்களாய்த் தடுமாறுகிறார்கள் என்கிற உண்மை இங்கே மூடி மறைக்கப்படுகிறது. வெட்கத்திற்குரிய இந்த நிலைமைக்கு என்ன காரணம்? நம் நாட்டுப் பள்ளிகளில் ஆங்கில மொழிப் பாடம் தமிழ் வழியில்தான் கற்பிக்கப்படுகிறது. ஆங்கிலவழிப் பாடங்கள் தமிழும், ஆங்கிலமும் கலந்து கற்பிக்கப்படுகின்றன. பயில்வது ஆங்கிலவழி; பயிற்சி ஏடு தமிழில். மாணவர்கள் இரண்டும் கெட்டான்கள். நம் நாட்டுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் படிக்கவும், எழுதவுமான பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி என்பது இல்லவேயில்லை.

சிக்கலின் முடிச்சு இங்கேதான் இருக்கிறது. சிக்கலை அவிழ்க்க என்ன வழி? முதலாவது, தொடக்கக் கல்வியில் ஆங்கிலவழியும் தேவையில்லை. ஆங்கிலப் பாடமும் தேவையில்லை. தாய்மொழியில் முறையாகப் படிக்கவும், எழுதவுமான பயிற்சி பெறுதற்கு முன்பாக அயல்மொழிப் பயிற்சியைத் திணித்தல் கொஞ்செயலன்றி வேறல்ல.

இரண்டாவது, நடுநிலைப் பள்ளியிலிருந்து ஆங்கிலப் பாடம் கற்பிக்க ஆங்கிலப் பட்டதாரிகளை அமர்த்த வேண்டும். தாய்மொழியாம் தமிழ் கற்பிக்க தமிழ்ப் பட்டதாரிகளை அமர்த்தும்போது, அயல்மொழியாம் ஆங்கிலத்தை எவரும் கற்பிக்கலாம் என்கிற நடைமுறை சரியன்று. எனவே, ஆங்கில இலக்கியப் பட்டதாரிகள் ஆங்கிலப் பாட ஆசிரியர்களாக வேண்டும்.

மூன்றாவது, ஆங்கில மொழிப்பாடம் என்பதில் பேச்சுப் பயிற்சியும் பேச்சுத் தேர்வும் கட்டாய அம்சங்களாக வேண்டும். எதிர்காலத்தில் ஆங்கிலம் கற்பிக்க, ஆங்கில மொழியில் பட்டமும் ஆங்கிலத்தில் பேச்சுத்திறமையும் உடையவர்களையே நியமிக்க வேண்டும். இடைக்காலத்தில், ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பேச்சுப் பயிற்சியளிக்கும் ஏற்பாட்டை அரசே செய்ய வேண்டும். இதன் வழியாக ஆங்கிலப் பாடம் முற்றிலும் ஆங்கில வழியில் நடைபெறும் சூழல் உருவாகும். அதன் வழியாக ஒவ்வொரு மாணவனும் ஆங்கிலத்தில் திறமையாகப் பேசவும், சரியாகப் படிக்கவும், முறையாக எழுதவும் முழுத் தகுதியும், திறமையும் உடையவனாவான். அவ்வாறாக ஆங்கில மொழித்திறன் பெற்றவன் எந்தக் கட்டத்திலும் தனது படிப்பையும், கணினித் தொழில் உட்படத் தனது பணியையும் ஆங்கிலத்தில் மாற்றிக் கொள்வதில் எள்ளத்தனையும் சிக்கல் ஏற்படாது.

தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் என்பது மட்டுமே நம்முடைய பெற்றோர்களின் விருப்பமாகிறது. தமிழ்வழிக் கல்வியில் ஆங்கில மொழிப் பயிற்சி முறையாகவும், நிறைவாகவும் அமையுமானால் அதையும் மீறி ஆங்கிலவழிப் பள்ளியை நாடியோடும் அளவுக்கு நம்மவர்கள் பைத்தியக் காரர்களல்ல.

தாய்மொழியில் படித்தால்தான் அறிவுத் திறன் கூடுதலாகும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இருக்கிறதா? இப்படியாக ஒரு வாதத்தை மெத்தப் படித்த வித்தகர்களே எழுப்புகிறார்கள். தாய்மொழியல்லாத அயல்மொழியில் – ஆங்கிலவழியில் படித்தால்தான் அறிவுத்திறன் அதிவேகம் பெறும் என்பதற்கான அறிவியல் ஆதாரம் என்ன? தமிழ்வழியை விடுத்து, ஆங்கில

வழியில் படிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பது தெளிவாகிற நிலையில் ஆங்கிலவழி எதற்கு என்னும் கேள்விக்குப் பதில் தேவை.

தாய்மொழியில் கற்றல் அறிவுத்திறனை வளர்க்குமா? அயல்மொழியில் கற்றல் அறிவுத்திறனைக் கூட்டுமா?

உதாரணமாக “ஹெப்டகன்’ என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் “எழுகோணம்’ என்பது பொருள். “ஹெப்டகன்’ என்பது ஏழுகோணங்கள் உடையது என மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி மனப்பாடம் செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக எழுகோணம் எனச் சொல்லும்போதே அதன் விளக்கமும் மனத்தில் பதிவாகிவிடும். இவ்வாறு ஒவ்வொரு சொல்லுக்கும், தொடருக்கும் கணக்கிட்டால் மாணவனின் நேரமும் உழைப்பும் எவ்வளவு மீதமாகும். இவற்றில் எது அறிவுஇயல்?

அடுத்து, தமிழ்வழிக் கல்விக்கு நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும், இதனோடு சேர்த்துப் பேச வேண்டிய இன்னொரு சிக்கலும் இருக்கிறது. நம்முடைய பெற்றோர்கள் தமிழ்வழியாகும் அரசுப் பள்ளிகளை விடுத்து, ஆங்கில வழியாகும் தனியார் பள்ளிகளை நாடியோடுதலுக்கு ஆங்கில மொழித்திறன் பற்றிய மயக்கம் மட்டும் காரணமல்ல. 10, 12வது பொதுத் தேர்வுகளில் பள்ளியின் தேர்ச்சி விழுக்காடும், கூடுதலான மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் தனியார் பள்ளிகளில் கூடுதலாதலும் முக்கியக் காரணமாகிறது. தனியார் பள்ளிகளின் சாதனைக்கு என்ன காரணம்?

1. காலை, மாலை வேளைகளில் தனிப்பயிற்சி நடத்துதல்.

2. 9, 11-வகுப்புக் கல்வியாண்டுகளில், 10, 12வது வகுப்புப் பாடங்களைத் தொடங்குதல்.

3. கோடை விடுமுறையிலும் பயிற்சியளித்தல்.

இந்த மூன்றையும் சுட்டிக்காட்டித்தான் தனியார் பள்ளியினர் கொள்ளைக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதன் ஒரு பகுதியை தனிப்பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஊதியமாக வழங்குகிறார்கள்.

இந்த மூன்றுக்கும் அரசுப் பள்ளிகளில் சட்டப்பூர்வ அனுமதி இல்லை. ஒருசில அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மேலதிகாரிகளின் வாய்மொழி ஒப்புதலுடன் தங்கள் பள்ளிகளில் முக்கியப் பாடங்களுக்கு மட்டும் தனிப்பயிற்சி நடத்துகிறார்கள். அந்தப் பள்ளிகள் சாதனைப் பள்ளிகளாகின்றன.

அரசுப் பள்ளிகளின் சாதனைக் குறைவுக்கு இன்னொரு காரணமும் உண்டு. அரசுப் பள்ளிகளில் அனுமதிக்கப்படும் பணியிடங்கள் முழுமையாக, தகுதியான ஆசிரியர்களால், முறையான ஊதிய விகிதத்தில் நிரப்பப்படுவதில்லை.

தனியார் பள்ளிகளில் 9, 10, 11, 12வது வகுப்புகளில் சேர வரும் மாணவர்களில் கூடுதலான மதிப்பெண் உடையோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆனால், அரசுப் பள்ளிகளில், முந்தைய வகுப்பில் தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றிருந்தாலும்கூட அனுமதி அளித்தாக வேண்டும். மறுத்தல் சட்ட விரோதம்.

எனவே, அரசுப் பள்ளிகளில்,

போதிய ஆசிரியர்களை அமர்த்துதல்; ஆங்கில மொழிப் பாடத்தைப் பேச்சுப்பயிற்சியுடன் நடத்துதல்; 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை, மாலை தனிப் பயிற்சியளித்தல்; 9, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கோடை விடுமுறையில் பயிற்சியளித்தல்.

இந்த நான்கையும் சட்டபூர்வமாகவும், முழுமையாகவும் நடைமுறைப்படுத்தினால் கிராமப்புற மாணவர்களும் தேவையான பயிற்சியுடன் கூடுதலான மதிப்பெண் பெற்று உயர்கல்வியில் நுழைதல் கூடுதலாகும். ஏழை – பணக்காரர் எனும் பாகுபாடின்றி இளையதலைமுறையினரிடையே உண்மையான கல்விச் சமநிலை ஏற்பட்டு சமச்சீரான சமூக முன்னேற்றம் உருவாகும்.

ஆக, ஆங்கிலவழிக் கல்வி, அதுவும் தொடக்கக் கல்வி ஆங்கிலவழியில் என்பது தமிழ்ப் பாதுகாப்பு என்பதுடன் தொடர்புடையதல்ல. நம் அன்புக்குரிய இளம்பிள்ளைகளான வளரும் பயிரில் வெந்நீர் ஊற்றுகின்ற கொடுஞ்செயல். எல்லாவற்றுக்கும் மேலாக, படித்தவர்கள் – பெரிய மனிதர்கள் பாடமொழி, பயிற்றுமொழி இரண்டிற்குமான வேறுபாடு புரிந்தும் புரியாதார் போலப் பேசும் வஞ்சனையை விடுத்து, மக்களுக்கு மெய்மையை உணர்த்தும் சான்றோர்களாக மாற வேண்டும்.

கட்டுரை ஆசிரியர்: சா. பன்னீர்செல்வம்
பதிப்பு தேதி: ஆகத்து 21, 2013
பத்திரிகை: தினமணி 
கட்டுரையாளர்: பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்.

One thought on “வஞ்சனை விடுத்துச் சான்றோராகுக!

  1. Private school children are studying english,tamil and hindi. Our poor government school children are studing all subjects in Tamil. There is a inferiority complex between them. Allowing and Studying hindi is not a crime. It is acompetitive world. Central Government jobs are unable to get by tamil students. cbsc students only can get it. After getting pg degree unable to understand english and unable to write english few pages without grammer mistakes. It should be changed.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன