உயர்நிலைப் பள்ளி

கனவும் நனவும்

தொடக்கப் பள்ளி வெற்றி தந்த ஊக்கமும் உற்சாகமும் உயர்நிலைப் பள்ளிக்கு வித்திட்டன. பணிக்குழுவாய் ஒருங்கிணைந்திருந்த நண்பர்கள் ‘தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை’யாய் உருத்திரண்டார்கள். அறக்கட்டளை உருவாகும் முன்பே உயர்நிலைப் பள்ளிக்கான இடத்தை 2010இல் எழில் விலைக்கு வாங்கியிருந்தார். தொடக்கப் பள்ளி தொடங்கும் போதே உயர்நிலைப் பள்ளிக்கான கனவு கருக்கொள்ளத் தொடங்கிவிட்டது. கனவின் முதல் நனவு வெளிப்பாடுதான் பள்ளிக்கான இடம். எழில் தொடங்கி வைக்க மற்ற பணிகளை அறக்கட்டளை தலைமேற்கொண்டு களம் இறங்கியது.

இன்று 6 முதல் 10 வரைக்கான வகுப்பறைகள், தலைமையாசிரியர் அறை, நூலக அறை, ஆய்வக அறை எனப் பள்ளிக் கட்டடம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. பள்ளிக்கு முன்புறம் பரந்த விளையாட்டிடம், சுற்றிலும் வளர்ந்து உயர்ந்து வரும் பல்வகை மரங்கள், பின்புறம் பள்ளித் தோட்டமாய் உருவாகக் காத்திருக்கும் கன்னி நிலம் என அனைத்தும் பள்ளிக்கு அழகூட்டி அருமை சேர்க்கின்றன. இன்று இவற்றை எழுத்தில் வடிப்பது எளிதாய் உள்ளது. ஆனால் அவற்றை உருவாக்கிய உழைப்பை, உழைப்பிற்குப் பின் நின்ற ஈகத்தை, ஈகத்தின் உறைவிடங்களான அறக்கட்டளை உறுப்பினர்களை என எல்லாவற்றையும் எழுத்தாக்கச் சொற்களைத் தேட வேண்டி உள்ளது.

கனவு காண்பது எளிதினும் எளிது. யார் வேண்டுமானாலும் காணலாம். ஆனால் அதை நனவாக்குவது என்பதோ மலையைக் கிள்ளி எலியைப் பிடிப்பது போன்றது. அதற்குக் கண் துஞ்சாக் கடும உழைப்புத் தேவை; கவனம் சிதறா ஒப்பளிப்புத் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாய் இயைந்த சூழலும் தகுந்த சுற்றமும் தேவை. இவை எல்லாமே கூடி வந்தாலும் கனவு அப்படியே நனவாகுவது முயற்கொம்பே! பல படிப்பினைகளை உயர்நிலைப் பள்ளிக் கனவு கற்றுத் தந்தது. அவை எல்லாவற்றையும் செரித்துக் கொண்டுதான் உயர்நிலைப் பள்ளி உயர்ந்து நிற்கிறது.

உயர்நிலைப் பள்ளி அமைவிடம்

கோவை திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பொங்கலூர்க்கு வெகு அருகில் பள்ளி அமைந்துள்ளது அதன் தனிச் சிறப்பு. பொங்கலூர்ப் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையை ஒட்டி உள்ளே செல்லும் பாதையில் ஒன்றரைக் கல் பயணித்து மேற்கே திரும்பினால் பள்ளி உங்களை வரவேற்கும். அப்படியே மறுபடியும் மேற்கே ஒரு கல் பயணித்தால் சிங்கனூர் என்னும் சிற்றூர்; அதன் வலது பக்கம் பயணித்தால் கணபதிபாளையம் வழியாகத் திருப்பூர் பல்லடம் சாலையை அடையலாம். இடது புறம் திரும்பினாலோ சில நொடிகளில் மீண்டும் கோவை திருச்சி நெடுஞ்சாலையை அடையலாம்.

முட்டை பறந்த கதை

தொடக்கப் பள்ளி வரலாற்றை விட உயர்நிலைப் பள்ளி வரலாறு சுவையானது, சிலபல சோகக் கதைகளை உள்ளடக்கியதும் கூட. அவற்றுள் ஒன்றான முட்டை பறந்த கதை எவர் மனதையும் தொடும்.

2012 மே மாதத்திற்குள் அறிந்தேற்பிற்கு விண்ணப்பிக்கத் தேவையான வகுப்பறைகளையும் பிற அறைகளையும் கட்டி முடிப்பது என்ற திட்டம் நிறைவேறவில்லை. தாளாளர் எழிலுக்கோ தம் பள்ளிக் குழந்தைகளை வேறு பள்ளியில் சென்று சேர்க்க மனம் இடம் தரவில்லை. ஆறாம் வகுப்பை அவ்வாண்டே தொடங்கி விடுவது என்று அறக்கட்டளை துணிந்து முடிவெடுத்தது. பள்ளி வாயிலருகே முடிந்தும் முடியாமலும் இருந்த காவலர் அறைதான் ஆறாம் வகுப்பு வகுப்பறையாக மாறியது.

சூன் மாதம் தென்மேற்குப் பருவக்காற்று திருப்பூரில் கடுமையாக வீசும். அப்படி மிகுந்த வேகத்துடன் காற்று வீசிய ஒரு நண்பகல் வேளை. ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்பறையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென்று காற்று பலத்த வேகத்துடன் வீசத் தொடங்கியது. சன்னல் பலகை திறந்து கொண்டது. காற்று அறைக்குள புகுந்தது. மாணவி சுவேதாவுடைய முட்டை வைத்திருந்த தட்டு பறக்கும் தட்டாகிப் பறந்தது. முட்டையும் அதோடு பறந்து அறைக்கு வெளியே விழுந்தது. அந்த சுவேதாதான் பத்தாம் வகுப்பில் 479 மதிப்பெண்கள் பெற்று முதல் அணியின் (2015-16) முதல் மாணவியாகத் தேறியுள்ளார்.